Published : 24 Jan 2024 06:29 AM
Last Updated : 24 Jan 2024 06:29 AM
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் மகளிர் கால்பந்து ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க காத்திருக்கிறார் தேயிலை தோட்ட தொழிலாளின் மகளான ஆர்.வினோதினி.
2021-ம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணி அதற்கு முன்னர் இரு முறை வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தது. இம்முறை சொந்த மண்ணில் மகுடம் சூடும் முனைப்பில் சிறப்பானவகையில் தயாராகி உள்ளனர் தமிழ்நாடு மகளிர் அணியின் வீராங்கனைகள்.
இந்த அணியில் '17 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சிமுகாமில் இடம்பெற்ற ஆர்.வினோதினி, ஆர்.தர்ஷினி தேவி,ஆர்.மதுமிதா ஆகிய மூவரும் இடம் பெற்றிருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. இதில் ஆர்.வினோதினி நடுகள வீராங்கனையாக உள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற தேசியசீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர்அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இதில் அணியின் வெற்றிக்கு ஆர்.வினோதினி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி தனது திறனால் தேர்வாளர்களை கவர்ந்தவினோதினி, அதன் பின்னரே 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வானார். பயிற்சி சிறப்பாக சென்ற நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆர்.வினோதினி கடைசி கட்ட தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது. எனினும் அவர், நம்பிக்கையை தளரவிடவில்லை. பயிற்சி முகாமில் நழுவவிட்ட வாய்ப்பினை கேலோ இந்தியா போட்டியின் வாயிலாக எட்டிப்பிடிப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்.
ஆர்.வினோதினி விளையாட்டுக்குள் எளிதாக நுழைந்துவிடவில்லை. அவரது பெற்றோர்கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளதேயிலை தோட்டத்தில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். தினமும் அதில் கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டே குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். வினோதினி வீட்டுக்கு 2வது பிள்ளை. அவருக்கு மூத்த சகோதரி ஒருவர் உள்ளார். சிறுவயதிலேயே கால்பந்தில் ஆர்வம் இருந்ததால் 7ம் வகுப்பு முதல் ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.
அங்கு பயிற்சியாளர்களால் பட்டை தீட்டப்பட்ட அவர், அங்கிருந்து பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார். தற்போது திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம்ஆண்டு படித்து வரும் அவர், கேலோ இந்தியா விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வெல்வதுடன் அதன் வாயிலாக அரசு வேலை வாய்ப்பை பெறுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆர். வினோதினி கூறுகையில் “17 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி பயிற்சிமுகாமில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகளில் நானும் ஒருவர். எனது தாய், தந்தை இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் சிறப்பாகசெயல்பட்டு தங்கப் பதக்கம் வெல்வதையே நோக்கமாக கொண்டுள்ளேன்.
முதன்முறையாக கேலோ இந்தியா விளையாட்டில் விளையாடுகிறேன். ஒட்டுமொத்த அணியும் நம்பிக்கையுடன் உள்ளோம். தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் அது எனது வேலை வாய்ப்புக்கு உதவும் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT