ரூட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக விளையாடும் தனது கனவுக்கு ஒளியூட்டிய நெட் பவுலர்

யாஷ்வீர்
யாஷ்வீர்
Updated on
1 min read

ஹைதராபாத்: இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வலைபயிற்சி மேற்கொண்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விக்கெட்டை யாஷ்வீர் எனும் நெட் பவுலர் கைப்பற்றி உள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 100+ டெஸ்ட் போட்டிகள், 11416 ரன்கள் மற்றும் 30 சதங்களை பதிவு செய்த பேட்ஸ்மேனான ரூட் விக்கெட்டை தான் யாஷ்வீர் வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் நெட் பவுலராக விளையாடி வரும் 17 வயது வீரர் தான் யாஷ்வீர். இடது கை ஸ்பின்னர். செவ்வாய்க்கிழமை அன்று ரூட்டுக்கு சுமார் 10 ஓவர்கள் வீசி உள்ளார். இது தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என அவர் சொல்கிறார்.

“இது எனக்கு மறக்க முடியாத சிறப்பான தருணம் ஆகும். ஜோ ரூட் போன்ற வீரருக்கு பந்து வீச வேண்டுமென்பது பெருங்கனவு. இது மாதிரியான வாய்ப்பை வாழ்நாளில் எத்தனை முறை பெற முடியும். அவர் சந்தித்ததே மகத்தானது. அப்படி இருக்கையில் அவரது விக்கெட்டை கைப்பற்றியது அதற்கும் மேலானது.

அவருக்கு 10 ஓவர்கள் வீசினேன். ஒரு சில வகையில் பந்து வீசுமாறு அவர் தெரிவித்தார். நானும் அப்படியே செய்தேன். அவருக்கு பந்து வீசும் போது நான் அச்சம் கொள்ளவில்லை. அதை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டேன். அவர் சொன்னபடி நன்றாக ஃப்ளைட் செய்து நான் வீசிய பந்து அவரது ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது” என்கிறார்.

ஜடேஜா போலவே பந்து வீசும் ஆக்‌ஷனை கொண்டவர். ஆனால், அவர் அதனை மறுக்கிறார். “இது எனது இயல்பான ஆக்‌ஷன். கிரிக்கெட் எனது பேஷன். நான் இந்த விளையாட்டை அதிகம் நேசித்து விளையாடுகிறேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்பது எனது கனவு. அதற்கு முன்பாக இந்திய இளையோர் கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும். மேலும் எனது மாநில அணிக்காக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in