ஷமி, கில், அஸ்வின் மற்றும் பலருக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கல்

ஷமி, கில், அஸ்வின் மற்றும் பலருக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கல்
Updated on
1 min read

ஹைதராபாத்: டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று (ஜன.23) வழங்கப்பட்டது.

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 2019-20, 2020-21, 2021-22, 2022-23 என நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித், லாலா அமர்நாத் விருதை பெற்றார். உனத்கட், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், ரியான் பராக் ஆகியோர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விருது பெற்றனர்.

2022-23 சீசனில் சிறந்த விக்கெட் டேக்கராக திகழ்ந்த அஸ்வின் மற்றும் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தீலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.

மகளிர் கிரிக்கெட்டில் பிரியா பூனியா, ஷெஃபாலி, மேக்னா, அமன்ஜோத் கவுர் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வால், அக்சர் படேல், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது சர்வதேச அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்துக்காக விருது பெற்றனர்.

மிதாலி, ஹர்மன்பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த காரணத்துக்காகவும், பூனம் யாதவ், ஜுலான் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தியதாலும் விருது பெற்றனர். தீப்தி (2019-20, 2022-23), ஸ்மிருதி (2020-21, 2021-22) ஆகியோர் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை வென்றனர்.

ஆடவருக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை ஷமி (2019-20), அஸ்வின் (2020-21), பும்ரா (2021-22) மற்றும் கில் (2022-23) வென்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர்கள் ஃபரூக் இன்ஜினியர் மற்றும் ரவி சாஸ்திரி பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in