Published : 25 Feb 2018 07:19 PM
Last Updated : 25 Feb 2018 07:19 PM

மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப்

 

பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த நூலில் தனது பாகிஸ்தான் பயணத்தை ஸ்வரஸ்யமாக கங்குலி விளக்கிக் கூறியுள்ளார்.

கங்குலி தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது அங்கு நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடருக்காக அங்கு சென்றபோது, லாகூரில் ஸ்விஸ் பியர் கான்டினென்டன் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் தங்கி இருந்தனர்.

அது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் லாகூரில் ஸ்விஸ் பியர் கான்டினென்டன் ஹோட்டலில் தங்கி இருந்தோம். லாகூரில் உள்ள கவால்மண்டி பகுதியில் கபாப், தந்தூரி உணவுகள், பிரியாணி, இறைச்சி உணவுகள் மிகச்சிறப்பாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். அதன்படி, அந்த இடத்துக்கு செல்ல அணியில் உள்ள சில நண்பர்களுடன் நள்ளிரவு தயாரானேன்.

பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினால், முறையான அனுமதி பெறவேண்டும் என்று கூறி மறுத்துவிடுவார்கள் என்பது தெரியவந்தது. ஆதலால், அணியின் மேலாளர் ரத்னாகர் ஷெட்டியிடம் மட்டும் தகவல் கூறினோம்.

முகமூடி அணிந்து கொண்டு, நானும் எனது நண்பர்களும் ஹோட்டலின் பின்புறக்கதவு வழியாக ஹோட்டலை விட்டு புறப்பட்டோம். நான் ஆபத்தான ஒரு செயலைச் செய்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும்,எந்தவித துப்பாக்கி, ஆயுதங்கள் பாதுகாப்பின்றி லாகூர் நகரில் பயணித்தோம்.

அந்த குறிப்பிட்ட பகுதியை அடைந்து, அங்கு தேவையான கபாப், பிரியாணி, சிக்கன், உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டோம். ஆனால், என் முகத்தை அங்கிருந்து ஒரு ரசிகர் கண்டுபிடித்துவிட்டார்.

உடனே” டேய் இங்கே பாருங்கள் கங்குலி வந்திருக்கிறார்! என்று கூறினார். நான் உடனே எனது குரலை மாற்றி நான் கங்குலி இல்லை என்று கூறினேன். உடனே அவர் சிரித்துக்கொண்டே, பரவாயில்லை என்று கூறி சென்றுவிட்டார்.

நான் சாப்பிட்ட ஹோட்டலில் ராஜ்தீப் சர்தேசாய் என்ற பத்திரிகையாளர் அமர்ந்திருந்தார். நான் புறப்படும்வரை அவர் என்னைப் பார்க்கவில்லை. நான் சாப்பிட்டதற்கான பில்தொகையை செலுத்தப் போனபோது, அந்த பத்திரிகையாளர் என்னைப் பார்த்துவிட்டார்.

உடனே, ஏ கங்குலி எப்படி இங்கே வந்தீங்க, என்று கூச்சலிட்டார். உடனே நான், ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து பணத்தை கொடுத்தேன். ஆனால், ஹோட்டல் முதலாளி நான் கங்குலி என்பதை அறிந்துகொண்டு பணத்தை பெற மறுத்துவிட்டார்.

அந்த இடத்தில் கூட்டம் கூடத் தொடங்கியது, மக்கள் நாலாபுறமும் சூழத் தொடங்கிவிட்டனர். நான் பில்தொகையை செலுத்திய போது, முதலாளி பணத்தை பெற மறுத்தார். எங்கள் நாட்டுக்கு வந்துள்ளீர்கள் உங்களிடம் பணம் வாங்கமாட்டோம், நீங்கள் எங்கள் நாட்டுடன் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றார். ஆனால், வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

நாங்கள் வந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு புறப்பட்டோம். ஆனால், பாகிஸ்தான் ரசிகர்கள் மோட்டார் பைக்கில் துரத்தினர். ரசிகர்களோ காரின் கண்ணாடியை இறக்கிவிடுங்கள் உங்களை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பைக் ஓட்டியபடியே கூறி துரத்தினர்.

ஆனால், காரின் டிரைவர் கூறுகையில், கார் கண்ணாடியை இறக்கினால், சில நேரங்களில் தீவிரவாதிகள் உங்களை தாக்கக்கூடும் ஆதலால் இறக்காதீர்கள் என்றார். ஆனால் ஹோட்டலுக்கு வரும் வரை எந்தவிதமான மிரட்டலும், ஆபத்தும் இல்லாமல் வந்து சேர்ந்தோம்.

நான் ஹோட்டலுக்கு வந்தபின் நான் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி லாகூர் நகரில் கபாப் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட செய்தி அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தெரிந்துவி்ட்டது.

நான் ஹோட்டல் அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசினேன். மறுமுனையில் நான் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பேசுகிறேன் என்று ஒரு குரல் கேட்டது. நான் கங்குலி பேசுகிறேன் என்றேன்.

உடனே எதிர்முனையில் பேசிய முஷாரப், பணிவான குரலில், அடுத்த முறை நீங்கள் லாகூர் நகருக்குள் செல்ல வேண்டுமானால், முன்கூட்டியே கூறுங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தருகிறோம். ஆனால், பாதுகாப்பின்றி இப்படி சாகச நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள் என்று அன்பாகக் கண்டித்தார்.

இவ்வாறு கங்குலி தனது நூலில் தனது சுவையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x