Last Updated : 01 Feb, 2018 09:20 PM

 

Published : 01 Feb 2018 09:20 PM
Last Updated : 01 Feb 2018 09:20 PM

டுபிளெசிஸ் பிரமாதமான சதம்: தென் ஆப்பிரிக்கா 8 விக். இழப்புக்கு 269 ரன்கள்!

டர்பன் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, கேப்டன் டுபிளெசிஸின் உறுதியான, பிரமாதமான 120 ரன்களுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 270 ரன்கள்.

டுபிளெசிஸ் மிக அருமையாக தன் இன்னிங்சை கட்டமைத்தார். 112 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 120 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் மோரிஸ் 37 ரன்கள் எடுத்தார். 15 ஓவர்களில் 83/1 என்று தென் ஆப்பிரிக்கா வலுவாக இருந்தது.

துணைக்கண்டத்துக்கு வெளியே சேர்ந்து ஆடும் இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் யாதவ் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சோதனைகளைக் கொடுத்து இருவரும் சேர்ந்து 20 ஓவர்களில் 79 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்பின்னர்களால் தென் ஆப்பிரிக்க அணி 134/5 என்று தடுமாறியது.

ஆனால் இங்குதான் ஃபாப் டுபிளெசிஸ் ஒரு கேப்டனாக ஆடினார், நிதானித்தார், பிறகு ஸ்கோர் செய்யத் தொடங்கினார், கடைசியில் இரண்டு அரக்க சிக்சர்களைக் காட்டி அதிரடி வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமாரை ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர் இடையில் ஸ்பின்னர்கள் நெருக்கும் போடு இன்னிங்ஸை கட்டமைத்ததுதான் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்காக ஏதாவது செய்ய முடியக்கூடிய ரன் எண்ணிக்கையைக் கொண்டு வந்தது.

ஜே.பி.டுமினி, குல்தீப் யாதவ்வின் கூக்ளியை கணிக்கவில்லை கட் ஆடப் போனார், தாழ்வாக வந்து பவுல்டு ஆனது, டேவிட் மில்லர் சரியாக ஆடாமல் குல்தீப் யாதவ் பந்தை கவரில் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். ஆனால் டுபிளெசிஸ் ஸ்பின்னர்களிடம் நிதானம் காட்டி வேகப்பந்து வீச்சில் 60 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். குறிப்பாக புவனேஷ்வர் குமாரை சாத்தினார்.

கிறிஸ் மோரிஸ் 37 ரன்களுக்கு நன்றாக ஆடினார், டுபிளெசிஸுடன் இணைந்து 74 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குல்தீப் யாதவ்வை இன்சைடு அவுட் ஷாட் ஒன்றில் ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். ஆனால் குல்தீப் யாதவ்விடமே பவுல்டு ஆனார். ஆல்ரவுண்டர் பெலுக்வயோ (27) டுபிளெசிஸ் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக மிக முக்கியமான 56 ரன்களைச் சேர்த்தனர்.

டுபிளெசிஸுக்கு ஒரு முறையீடு வாய்ப்பை இந்தியா தவற விட்டது, அவர் 18 ரன்களில் இருந்த போது சாஹல் பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் நாட் அவுட் தீர்ப்பை ரிவியூ செய்ய தவறியது இந்தியா. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பைத் தாக்குவது தெரிந்தது.

ஃபார்மில் இல்லாத குவிண்டன் டி காக் நிதானமாக ஆடி 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் எல்.பி.ஆனார், இவரும் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தால் பிழைத்திருப்பார். பும்ரா பந்தில் ஆம்லா பிளம்ப் அவுட் ஆனார். மார்க்ரம் 9 ரன்களில் பாண்டியாவின் ஷார்ப் கேட்சுக்கு சாஹலிடம் வெளியேறினார்.

குல்தீப் யாதவ் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க சாஹல் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைபற்ற, புவனேஷ்வர் குமார் 10 ஒவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டார். பாண்டியா சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. தென் ஆப்பிரிக்கா 269 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x