Published : 21 Jan 2024 11:35 AM
Last Updated : 21 Jan 2024 11:35 AM
கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தற்போது 3-வதாக நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. இவரும், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம்ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் இஷான் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கு இடையே அதிக அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. சானியா மிர்சா, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரிலேயே தங்கியிருந்தார். அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" என பதிவு செய்திருந்தார். இதனால் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதுதொடர்பாக இருவருமே கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.
இந்த குழப்பத்துக்கு இடையே, ஷோயப் மாலிக், பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார். கராச்சியில் இந்தத் திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளது. ஷோயப்மாலிக் செய்யும் 3-வது திருமணமாகும் இது. அவர் முதலாவதாக ஆயிஷா சித்திகி என்பவரைத் திருமணம் செய்து 2010-ல் விவாகரத்துசெய்திருந்தார். அதிகாரப்பூர்வமாக சானியா மிர்சாவின் விவாகரத்து விஷயம் வெளியே தெரிவதற்கு முன் இத்திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே, அவர் சானியா மிர்சாவை, தலாக் முறைப்படி விவாகரத்து செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சானியா குடும்ப வட்டாரங்கள் கூறியதாவது: இஸ்லாம் மதத்தின் `குலா' வழக்கப்படி இந்த விவாகரத்து நடந்துள்ளது. ஒரு முஸ்லிம் பெண் தனது கணவரை ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமைதான் `குலா' என்பதாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷோயப் மாலிக், தற்போது திருமணம் செய்திருக்கும் நடிகைசனா ஜாவேத், பாகிஸ்தான் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து வருபவர் ஆவார். சனா ஜாவேத்துக்கு இது 2-வது திருமணமாகும். அவர் இதற்கு முன்பு2020-ல் பாடகர் உமைர் ஜெய்ஸ்வாலை திருமணம் செய்திருந்தார். பின்னர் கணவர் உமைரை விவாகரத்து செய்த நிலையில், ஷோயப் மாலிக்குடன் திருமணம் செய்துள்ளார் சனா ஜாவேத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT