ஜெகதீசன் இரட்டை சதம்: ரஞ்சி கோப்பை முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 489 ரன்கள் குவிப்பு

படம்: ஜெ.மனோகரன்
படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டி நேற்று முன்தினம் நாடு முழுவதும் தொடங்கியது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி மற்றும் ரயில்வேஸ் அணி மோதும் போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று களம் இறங்கிய தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கோவை வீரர் ஜெகதீசன் 155 ரன், முகமது அலி 1 ரன்னுடன் ஆட்டத்தை தொடங்கினர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது அலி 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து ஜெகதீசனுடன் கேப்டன் சாய்கிஷோர் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்த நிலையில் கரண்சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து முகமது 20 ரன், அஜித்ராம் 17 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதற்கிடையே, ஜெகதீசன் நிலைத்து நின்று ஆடி இரட்டை சதம் விளாசினார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 245 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் தமிழ்நாடு அணி 489 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் ரயில்வேஸ் அணியின் ஆகாஷ் பாண்டே 3 விக்கெட்டுகள், கரண் சர்மா, முகமது சயிப், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து ரயில்வேஸ் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சிவம் சவுத்ரி 16 ரன், விவேக் சிங் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரயில்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வீரர்கள் பிரதம்சிங் 76 ரன்கள், நிஷாந்த் குஷ்வா 22 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in