சங்ககாரா இரட்டை சதம்: டிராவாகிறது இலங்கை-பாக்.டெஸ்ட்

சங்ககாரா இரட்டை சதம்: டிராவாகிறது இலங்கை-பாக்.டெஸ்ட்
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 163.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 533 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளதால் இந்தப் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமார் சங்ககாரா இரட்டை சதமடித்து இலங்கை அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 10-வது இரட்டைச் சதம் இதுவாகும். இதன்மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் பிராட்மேனுக்கு (12 சதங்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் சங்ககாரா.

இலங்கையின் காலேவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 140.5 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யூனிஸ்கான் 177 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ஜெயவர்த் தனா 59 ரன்களில் வீழ்ந்தார்.

5-வது விக்கெட்டுக்கு 181

இதையடுத்து சங்ககாராவுடன் இணைந்தார் மேத்யூஸ். இந்த ஜோடி சிறப்பாக ஆட 113-வது ஓவரில் 350 ரன்களை எட்டியது இலங்கை. இதன்பிறகு மேத்யூஸ் 103 பந்துகளில் அரைசதமடிக்க, 168 ரன்களில் இருந்தபோது 2-வது முறையாக ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார் சங்ககாரா.

இலங்கை அணி 438 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 188 பந்துகளைச் சந்தித்த மேத்யூஸ் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்தார். 5-வது முறை யாக 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட் டுள்ளார் மேத்யூஸ். சங்ககாரா-மேத்யூஸ் ஜோடி 5-வது விக்கெட் டுக்கு 181 ரன்கள் சேர்த்தது.

சங்ககாரா இரட்டை சதம்

இதன்பிறகு வந்த விதாஞ்ஜே, டிக்வெல்லா ஆகியோர் தலா 5 ரன்களில் வெளியேற, சங்ககாரா 398 பந்துகளில் இரட்டை சதமடித்தார். இதனிடையே பெரேரா 5 ரன்களில் வெளியேற, 8-வது விக்கெட்டாக சங்ககாரா ஆட்ட மிழந்தார். அவர் 425 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 221 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை விளாசிய தமிகா பிரசாத் 31 ரன்களில் ஆட்டமிழக்க, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இலங்கை. அப்போது ஹெராத் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான்-4/1

முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in