படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்

U19 WC: IND vs BAN | தொடரை வெற்றியுடன் தொடங்கிய நடப்பு சாம்பியன் இந்தியா!

Published on

ப்ளூம்ஃபோன்டைன்: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ஆடவர் அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டுள்ளது. கடந்த 2022-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் வங்கதேசம், அமெரிக்க மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

வங்கதேச அணிக்காக எதிராக இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் இந்தியா விளையாடியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 76 ரன்கள் எடுத்தார். உதய் சஹாரன் 64 ரன்கள் எடுத்தார். சச்சின் தாஸ், அவனிஷ் மற்றும் பிரியன்ஷூ ஆகியோர் 20+ ரன்கள் எடுத்து உதவினர். உதிரி ரன்களாக 23 ரன்கள் இந்தியாவுக்கு கிடைத்தது. வங்கதேச பவுலர் மர்ஃப் மிருதா, 8 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இருந்தும் 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக மொகமது ஷிஹாப் 54 ரன்களும், இஸ்லாம் 41 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பாண்டே 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 9.5 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார். அவரை போலவே இந்திய அணியின் பவுலர்கள் ரன் கொடுக்காமல் நல்ல எகானமியில் பந்து வீசி இருந்தனர். அதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in