ராமர் கோயில் திறப்பு விழா: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நேரில் அழைப்பு

அழைப்பிதழ் பெற்றுக் கொண்ட அஸ்வின்
அழைப்பிதழ் பெற்றுக் கொண்ட அஸ்வின்
Updated on
1 min read

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையும் வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு இப்போது நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை (இன்று) அவரை நேரில் சந்தித்த தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, துணை தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கி, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு அழைத்துள்ளனர். அதனை அஸ்வின் பெற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பான படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. முன்னதாக, கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கோலி மற்றும் தோனி ஆகியோருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்க பிசிசிஐ வசம் கோலி அனுமதி கோரி இருப்பதாக தகவலும் வெளியானது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் அயோத்தி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in