Published : 18 Jan 2024 06:33 AM
Last Updated : 18 Jan 2024 06:33 AM
விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார். இதில் கருப்பு நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 62-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இதன் மூலம் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதான பிரக்ஞானந்தா. இதற்கு முன்னர் இந்த சாதனையை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியிருந்தார். டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)லைவ் ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறியதுடன் 2748.3 புள்ளிகளுடன் இரு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளையில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளுடன் ஒருஇடம் பின்தங்கி 12-வது இடத்தில் உள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளார் பிரக்ஞானந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தற்போது 2721.3 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார். 13 சுற்றுகள் கொண்ட டாடாஸ்டீல் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT