Published : 18 Jan 2024 06:11 AM
Last Updated : 18 Jan 2024 06:11 AM

கேலோ இந்தியா போட்டிக்கான அனுமதி சீட்டு - செயலி மூலம் பெற ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் நேரில் காண செயலிமற்றும் இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டுகளைப் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன.

இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட அனுமதிச் சீட்டுகளை வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவோ https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.நேரில் போட்டியைக் காண்பதற்கு செல்லும்போது பதிவிறக்கம் செய்த அனுமதிச் சீட்டை அலைபேசியிலோ அச்சிடப்பட்ட தாளிலோகொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு: கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழா நாளை மாலை6 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. தொடக்க விழா ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 12 நாட்கள் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க விழாவின்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள வீரர், வீராங்கனைகள் சிறந்த வசதியுடன் தங்குவதற்கான ஏற்பாடுகளை சாய் அமைப்புடன் இணைந்துசெய்துள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x