Published : 16 Jan 2024 09:46 AM
Last Updated : 16 Jan 2024 09:46 AM

வெயிட்டிங் கேம் ஓவர்... இனி அதிரடி ஆட்டம்தான்! - விராட் கோலியின் உருமாற்றம்!

2022-டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளில் இந்திய அணி தோற்ற பிறகு மீண்டும் டி20 போட்டியில் அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். அவரது ஆட்டம் மரபு கிரிக்கெட் பாணியில் ரன்களை சேர்க்கும் விராட் கோலியா இது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, டி20- கிரிக்கெட்டில் இனி அதிரடிதான் வெயிட்டிங் கேம் கிடையாது என்பதை விராட் கோலியின் உடல் மொழி கூறுவது போல் இருந்தது.

கோலியின் சிறப்பம்சமே ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பேட்டிங் முறை என்பதாக இல்லாமல் தனது கிளாசிக் அணுகுமுறையையே வடிவத்தின் நெருக்கடிகளும் தேவைகளும் மீறி அவரிடம் காணப்பட்டது, ஆனால் டி20 அணியில் நீடிக்க வேண்டுமெனில் புதிய அதிரடி முறையைக் கடைப்பிடித்தால்தான் இனி நீடிக்க முடியும் என்பதை கோலிக்கு யாரோ அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் அவர் கோபமாக ஆடியது போல் தெரிந்தது. பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தையும் ரசித்து ருசித்து ஆடக்கூடியவர் விராட் கோலி. அதுதான் அவரது வெற்றிக்கான காரணமும் கூட.

தட்டி விட்டு வேகமாக ஒன்று, இரண்டு, மூன்று ரன்களை எடுப்பது தளர்வான பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு அனுப்புவது என்பதுதான் கோலியின் அணுகுமுறை, ஆனால் அன்று ஆப்கானுக்கு எதிராக அவரது பாணிக்கு எதிராக தூக்கி தூக்கி அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதை பார்த்திருக்கலாம். அன்று பசலுல்லா பரூக்கி வீசிய பந்தை மிட் ஆன் திசையில் விளாசினார். ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். பிறகு கோலி அதிகம் ஆடாத ஸ்லாக் ஸ்வீப்பிலும் அன்று அதே ஓவரில் பவுண்டரி விளாசினார். அதாவது முன் கூட்டியே இந்தப் பந்தை இந்த ஷாட்தான் ஆடப்போகிறோம் என்று ஆடப்பட்ட ஸ்லாக் ஸ்வீப் ஆகும் அது.

பொதுவாக கோலி அப்படி முன் கூட்டியே ஆடக்கூடியவர் அல்ல, பந்துதான் அவரது ஷாட்டைத்தேர்வு செய்யும். இப்போது கொஞ்சம் டேஷர் என்ற அணுகுமுறையை கோலி கடைப்பிடிக்கப் போகிறார் என்று தெரிகிறது. மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாரிஸ் ராவுஃப்பின் கடினமான லெந்த் பந்தை ஃபிளாட் பேட் ஷாட்டாக சிக்ஸ் அடித்ததை யாரும் மறக்க முடியாது. ஆனால் அந்த ஷாட் சூழ்நிலையின் நிர்பந்தத்தினால் விளைந்தது, அன்று ஆப்கானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் கோலியின் மாற்றத்தை பறைசாற்றுவதாக உள்ளது. அன்று நவீன் உல் ஹக் பந்தையும் அதே பாணியில் விளாசினார் கோலி.

வேகப்பந்து வீச்சாளரை ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறார். இதெல்லாம் கோலியின் உருமாற்றத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் கோலியின் இத்தகைய மாற்றம் டி20 க்காக செய்து கொள்வது அவரது டெஸ்ட் பேட்டிங்கை பாதிக்க வாய்ப்புள்ளது. இன்று வரை டெஸ்ட் போட்டிகளிலும் கோலிதான் சிறப்பாக ஆடிவருகிறார்.

கோலி கோலியாக இருக்க வேண்டும், சேவாக் ஆக முயற்சிக்கக் கூடாது. அது அவருக்கு வராது. ஒரு கிளாசிக் பேட்டர் வலுக்கட்டாயமாக அதிரடி முறைக்குத் திரும்புவது எதிர்மறையாகப் போய் முடியும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் கோலிக்கு ஏதோ பிரஷர் கொடுக்கப்படுகிறது என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x