ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே
Updated on
1 min read

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆன்டி முர்ரே.

கடந்த 2010, 2011, 2013, 2015 மற்றும் 2016 என ஐந்து முறை இறுதிப் போட்டியில் முர்ரே விளையாடி உள்ளார். 36 வயதான அவருக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் நடப்பு ஆஸ்திரேலிய தொடரின் முதல் சுற்றில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் வசம் 4-6, 2-6, 2-6 என தோல்வியை தழுவினார். சுமார் 61 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.

“நான் இங்கு விளையாடுவது இதுவே கடைசியாக இருக்க வாய்ப்புள்ளது. நான் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இப்படி இதனை நிறைவு செய்வது கடினமாக உள்ளது. ஓய்வு குறித்து எனது குடும்பம் மற்றும் பயிற்சியாளருடன் பேசி முடிவு செய்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ல் ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெற்றார். 2023-ல் ரஃபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார். அதன் பிறகு அந்த சீசன் முழுவதும் முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்காமல் இருந்தார். ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இலக்காக வைத்து நடப்பு ஆஸி. ஓபனில் விளையாடி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in