IND vs AFG 2-வது டி20 | ஜெய்ஸ்வால் + துபே அதிரடி பேட்டிங்: தொடரை வென்றது இந்தியா!

IND vs AFG 2-வது டி20 | ஜெய்ஸ்வால் + துபே அதிரடி பேட்டிங்: தொடரை வென்றது இந்தியா!
Updated on
1 min read

இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. 173 ரன்களை விரட்டிய இந்திய அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் துபே இணைந்து அதிரடியாக பேட் செய்து ரன் குவித்தனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் குலாப்தீன் நைப் 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் ஸ்கோர் செய்தார். கரீம் மற்றும் முஜீப் ஆகியோர் வேகமாக ரன் குவித்தனர். குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மதுல்லா, நபி ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். பிஷ்னோய் மற்றும் அக்சர் என இருவரும் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கோலி, 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் துபே மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து அதிரடி கூட்டணி அமைத்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 92 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜிதேஷ் சர்மா வந்த வேகத்தில் வெளியேறினார். ரிங்கு 9 ரன்கள் எடுத்திருந்தார்.

மறுமுனையில் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார் துபே. கடந்த போட்டியை போலவே சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 15.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. இந்த தொடரின் அடுத்தப் போட்டி பெங்களூருவில் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in