Published : 12 Jan 2024 06:10 AM
Last Updated : 12 Jan 2024 06:10 AM

சொந்த ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதே லட்சியம்: பாரா பவர் லிஃப்டிங்கில் பதக்கம் வென்ற வி.சரவணன் உறுதி

உதகை: சொந்த ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதே லட்சியம் என்று, டெல்லியில் பாரா பவர்லிஃப்டிங்கில் வெள்ளி பதக்கம் வென்ற வி.சரவணன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி குண்டாடா கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயன்-அஞ்சலா ஆகியோரின் மகன் வி.சரவணன் (35). மாற்றுத்திறனாளியான இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கேலோ இந்தியா பாரா கேம்ஸ் போட்டியில் பாரா பவர் லிஃப்டிங் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டார். 65 கிலோ எடை பிரிவில் 150 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

இவரை கவுரவப்படுத்தும் வகையில், அவர் பணிபுரியும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.எஸ்.ராஜேஷ்குமார் தலைமையில், தமிழ்நாடு காப்பாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் டிவேணுகோபால் மற்றும் சக காப்பாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், வி.சரவணன் பேசும்போது, ‘‘இப்போட்டியில் கலந்துகொள்ள உதவிய மற்றும் அனைத்து உதவிகளையும் செய்த தமிழ்நாடு பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், ஊக்கமளித்த சக பணியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் பெற்று, எங்கள் ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதே எனது லட்சியம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x