Published : 11 Jan 2024 06:06 AM
Last Updated : 11 Jan 2024 06:06 AM
மொகாலி: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின்முதல் ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
3 டி20 கிரிக்கெட் போட்டிகொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி,இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையே குறுகிய வடிவிலான இருதரப்பு தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மொகாலியில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா,விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அணியின் கேப்டனான ரோஹித்சர்மா, 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடியது போன்று பவர்ப்ளேவில் ஆக்ரோஷ அணுகுமுறையைத் தொடர்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் விராட் கோலி நடு ஓவர்களில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க முயற்சிக்கக்கூடும்.
தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன், ஜெய்ஸ்வால் களமிறங்க உள்ளார். முதல் ஆட்டத்தில் விராட் கோலி சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளதால் அவரது இடத்தில் ஷுப்மன் கில் களமிறங்கக்கூடும். திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவதில் ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன்ஆகியோர் இடையே போட்டி நிலவக்கூடும். எனினும் ஜிதேஷ்சர்மாவே இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கடந்த இரு தொடர்களிலும் அவர் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டிருந்தார்.
மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷிவம் துபே சேர்க்கப்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருடன் குல்தீப்யாதவும் அணியில் உள்ளார். இவர்களில்குல்தீப் யாதவ் அல்லது அக்சர்படேலுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ஆப்கானிஸ்தான் அணி இப்ராகிம் ஸத்ரன் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் களமிறங்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் அவர், முதுகுவலி காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
முழு உடற்தகுதியை எட்டாததால் அவர், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிசிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருந்தது. இந்த நம்பிக்கையுடன் டி 20 தொடரை அந்த அணி அணுகுகிறது.
முதல் ஆட்டத்தில் விராட் கோலி விலகல்: டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்பட்டிருந்தார். முதல் போட்டி மொகாலியில் இன்று இரவு நடைபெறுகிறது. இதற்கிடையே சொந்த காரணங்களுக்காக இந்த ஆட்டத்தில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார். எனினும் 14-ம் தேதி இந்தூரில் நடைபெறும் 2-வது ஆட்டம் மற்றும் 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள 3-வது ஆட்டம் ஆகியவற்றில் விராட் கோலி விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT