

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இதுவரை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், வேகத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அலிஸ்டர் குக், கேரி பேலன்ஸ், மொயீன் அலி ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வருண் ஆரோன் இது குறித்து கூறியதாவது:
"எனக்கு 5 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் வேகமாக வீசுவதிலிருந்து ஒரு போதும் பின்னடைய மாட்டேன், அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கு தெளிவான அறிவுறுத்தல் வந்துள்ளது, ஷார்ட் ஸ்பெல்களில் அதிவேகமாக வீச வேண்டும் என்று என்னிடம் கோரப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் விளையாட வேண்டும் என்று சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கு வைத்திருந்தேன். பிசிசிஐ எனக்கு ஆதரவு அளித்தது. எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமி மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனக்கு பயிற்சி வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.
இந்த டெஸ்ட் போட்டி எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது, எனது பந்து வீச்சு குறித்தும் நான் திருப்தியாக உணர்கிறேன்” என்று கூறிய வருண் ஆரோன், மொயீன் அலியை வீழ்த்தியது பற்றிக் கூறும் போது, “முதலில் அவருக்கு ஒரு பவுன்சரை வீசி அதன் பிறகு குட் லெந்த்தில் இன்ஸ்விங்கரை வீசினேன்.
விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனாலும் இந்த டெஸ்ட் போட்டி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கிலாந்து 100 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால் கூட நாங்கள் சமாளித்து விடுவோம்” என்றார்.
2ஆம் நாளான நேற்று உணவு இடைவேளைக்குப் பிறகு 9 ஓவர்கள் வீசிய பிறகு மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை. இங்கிலாந்து 85 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னமும் 4 விக்கெட்டுகள் கையில் உள்ளது.