Published : 07 Jan 2024 06:53 AM
Last Updated : 07 Jan 2024 06:53 AM

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி: தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது

சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 313 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 299 ரன்களும் சேர்த்தன. 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது ஜோஷ் ஹேசில்வுட் பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அப்துல்லா ஷபிக் 0, ஷான் மசூத் 0, சைம் அயூப் 33, பாபர் அஸம் 23, சவுத் ஷகீல் 2, சஜித் கான் 0, ஆகா சல்மான் 0 ரன்களில் நடையை கட்டினர்.

3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 26 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 6, அமீர் ஜமால் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 28, அமீர் ஜமால் 18, ஹசன் அலி 5 ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4, நேதன் லயன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

130 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது 25.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்கவீரரான டேவிட் வார்னர் 75 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் சஜித் கான்பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா ரன் ஏதும் சேர்க்காமல் நடையை கட்டினார். மார்னஷ் லபுஷேன் 73 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித்4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. பெர்த்தில் நடைபெற்ற முதல்போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்பர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டிருந்தது.

ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் அமீர் ஜமால் தேர்வானார். அவர், பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் விளாசிய நிலையில் பந்து வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். தொடர் நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வானார். அவர், இந்த தொடரில் 19 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார்.

விடைபெற்றார் வார்னர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர், சிட்னியில் முடிவடைந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

37 வயதான அவர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள், 37 அரை சதங்களுடன் 44.59 சராசரியுடன் 8,786 ரன்கள் குவித்துள்ளார். வார்னரின் அதிகபட்ச ரன் 335* ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x