Published : 02 Jan 2024 06:39 AM
Last Updated : 02 Jan 2024 06:39 AM
மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்குமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்தியஅணி வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் மோதி வருகின்றன. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
முதல் போட்டியில் இந்திய அணி 282 ரன்களை குவித்த போதிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத மோசமான பந்து வீச்சால் தோல்வியை சந்தித்தது. அதேவளையில் 2-வது போட்டியில் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்து சரிவை நோக்கி பயணித்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்தது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. அதிலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 கேட்ச்களை தவறவிட்டிருந்தது.
இது ஒருபுறம் இருக்க கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கில் பார்மின்றி தவிப்பது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஹர்மன்பிரீத் கவுர் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 3 முறை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டி உள்ளார். இதில் அதிகபட்சமாக கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 49 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் டக் ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 5 ரன்களும் மட்டுமே சேர்த்தார். நெருக்கடியுடன் களமிறங்கும் அவர், இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.
அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் 117 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய ரிச்சா கோஷ், முதல் ஆட்டத்தில் 82 ரன்கள் சேர்த்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மா ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினால் அணியின் பலம் அதிகரிக்கும். ஸ்நே ராணா முழு உடற்தகுதியுடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.
டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசி ஆட்டத்தையும் அந்த அணி வெற்றிகரமாக நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். கேப்டன் அலிசா ஹீலி, ஃபோபி லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி ஆகியோர் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும்.
16 வருட சோகம்.. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது.
இதன் பின்னர் கடந்த 16 ஆண்டுகளாக அந்த அணியை தோற்கடிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு தடை போட வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் இந்திய அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT