

திருப்பூர்: தேசிய அளவிலான த்ரோ பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, திருப்பூருக்கு திரும்பிய பெண் தொழிலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 31-வது சப் - ஜூனியர் மற்றும் 46-வது சீனியர் தேசிய அளவிலான த்ரோ பால் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளில், 18 மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. இதில் சீனியர் தேசிய அளவிலான த்ரோ பால் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதின.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அணி சார்பில் வைஷ்ணவி, ஷிவானி, நீலு, பெண்ணரசி, அமிர்தா, அக்ஷயா, பிரியா ஆகியோர் பங்கேற்றனர். இதில் வைஷ்ணவி, ஷிவானி, நீலு ஆகிய 3 பேரும் அவிநாசி அருகே தெக்கலூரை சேர்ந்த தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் ஆவர். இவர்கள், தமிழ்நாடு அணிக்கு தேர்வாகி விளையாடி வருகின்றனர்.
ஜார்க்கண்டில் இருந்து நேற்று திருப்பூருக்கு வந்த தமிழக அணிக்கு, தனியார் நூற்பாலை சார்பில் மேள, தாளங்கள் முழங்க பனியன் நிறுவன தொழிலாளர்கள் நடனமாடி உற்சாகமாக வரவேற்பளித்தனர். இதில் பலர் பங்கேற்றனர். காலை, மாலை வேளைகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை தனியார் நூற்பாலை நிறுவனம் அளித்ததால், இந்த வெற்றியை ஈட்டியுள்ளதாக விளையாட்டு வீராங்கனைகள் தெரிவித்தனர்.