Published : 01 Jan 2024 06:04 AM
Last Updated : 01 Jan 2024 06:04 AM

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவதை ஷுப்மன் கில் குறைத்துக் கொள்ள வேண்டும்: ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுரை

புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவதை இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3-ம் தேதி கேப்டவுன் மைதானத்தில் தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும்இந்திய அணியின் வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஷுப்மன் கில்லுக்கு இந்தியகிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: சர்வதேச டி20 போட்டி, ஒருநாள் போட்டி, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர் ஷுப்மன் கில். ஆனால் அதேபோன்று அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஷுப்மன்கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிடும்போது டெஸ்ட் கிரிக்கெட் சற்று வித்தியாசமானது. பந்தில் தான் வித்தியாசம் உள்ளது.

வெள்ளை பந்துடன் ஒப்பிடும்போது டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் சற்று விலகியே செல்லும். சிவப்பு பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகும். அதைஷுப்மன் கில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏற்ப வீசப்படும் நல்ல பந்துகளுக்காகஅவர் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் டெஸ்ட் போட்டிகளிலும் ஜொலிக்க முடியும்.

ஷுப்மன் கில் தனது கிரிக்கெட்வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தொடங்கினார். களத்தில்அவர் ஆடிய ஷாட்களைப் பார்த்து நாங்கள் அவரைப் வெகுவாக பாராட்டினோம். அவர் மீண்டும் தனது ஃபார்முக்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் கடினமாக பயிற்சி செய்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x