Published : 31 Dec 2023 08:27 AM
Last Updated : 31 Dec 2023 08:27 AM
பெங்களூரு: ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட அணிக்கு சவிதா பூனியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். வந்தனா கட்டாரியா துணை கேப்டனாக செயல்படுவார் என ஹாக்கிஇந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி நியூஸிலாந்துடனும், 16-ம் தேதி இத்தாலியுடனும் பலப்
பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ராஞ்சியில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. சீனியர் கோல் கீப்பரான சவிதா பூனியா கேப்டனாக தொடரும் நிலையில், துணை கேப்டனாக வந்தனா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். சவிதா சமீபத்தில் ஆண்டின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்றிருந்தார். முன்கள வீராங்கனையான வந்தனா, இந்திய அணிக்காக 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர்.
இந்திய அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: சவிதா பூனியா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்,
டிபன்டர்கள்: நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, மோனிகா
நடுகளம்: நிஷா, வைஷ்ணவி விட்டல் பால்கே, நேஹா, நவ்நீத் கவுர், சலிமா டெட்டே, சோனிகா, ஜோதி, பியூட்டிடங்டங்
முன்கள வீராங்கனைகள்: லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனாகட்டாரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT