Published : 25 Jan 2018 08:39 PM
Last Updated : 25 Jan 2018 08:39 PM

பும்ரா, புவனேஷ்வர், ஆம்லா அபாரம்: தென் ஆப்பிரிக்கா 194 ரன்களுக்குச் சுருண்டது

வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆம்லா மிகப்பிரமாதமாக ஆடி 61 ரன்களை எடுக்க இந்தியா தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

புவனேஷ்வர் குமார் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மொகமது ஷமி கடும் ஏமாற்றமளித்தார். மற்றவரெல்லாம் 3 ரன்களுக்குக் கீழ் கொடுக்க ஷமி 12 ஓவர்களில் 46 ரன்களுக்கு1 விக்கெட் என்பது இந்தப் பிட்சில் மோசமான பந்து வீச்சுதான்.

முதல் நாள் பிட்சை விட 2-ம் நாள் பிட்ச் கொஞ்சம் வேகம் கூடியிருந்தது. இதனால்தான் டாஸ் வென்று கோலி பேட்டிங்கை தேர்வு செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும். இந்தப் பிட்சில் ஷமி பவுலிங் ஏமாற்றமே. மற்றபடி தென் ஆப்பிரிக்காவை விட இந்திய பவுலர்கள் அபாயகரமாக வீசினர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக ரபாடா பந்துகளை சந்திப்பதிலும் ஆடாமல் விடுவதிலும், ஷார்ட் தேர்விலும் தேர்ந்த ஒரு மட்டையாளர் போல் ஆடினார்.

உணவு இடைவேளையின் போது 81/3 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளைக்குப் பிறகு 5 ரன்களில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமாரின் அதி அற்புத இன்ஸ்விங்கருக்கு பவுல்டு முறையில் இழந்தது. முன்னதாக ஒரு எல்.பி. அவுட் ஆனார் டிவில்லியர்ஸ், அதாவது நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரீப்ளேயில் அது பிளம்ப், ஆனால் விராட் கோலி நடுவர் அழைப்பு என்று ரிவியூ செய்யாமல் விட்டு விட்டார், அவர் ரிவியூ செய்திருக்க வேண்டும், ஏனெனில் நடுவர் அழைப்பு என்றால் ரிவியூ இழப்பு ஏற்படாது, ஆனால் கோலி ரிவியூ செய்யவில்லை. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புவனேஷ்வர் தனது இன்ஸ்விங்கரால் உறுதி செய்தார்.

டுபிளெசிஸ் 8 ரன்கள் எடுத்து பும்ராவின் இன்ஸ்விங்கரை தவறாகக் கணித்து ஸ்டம்பை இழந்தார். பந்து உள்ளே வருவது தெரிந்தது, ஆனால் ஸ்டம்புக்கு மேலே செல்லும் என்று அவர் நினைத்தார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. குவிண்டன் டி காக் பும்ராவின் இன்னொரு அருமையான பந்தை நேராக பஞ்ச் செய்ய முயன்றார் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே இடைவெளி ஏற்பட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு படேல் கையில் கேட்ச் ஆனது. 125/6 என்ற நிலையில் பிலாண்டர், ஆம்லாவுடன் இணை தார். தேநீர் இடைவேளையின் போது 143/6 என்று தென் ஆப்பிரிக்கா இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிலாண்டர் கடுமையாக பொறுமையைச் சோதித்தார். அவர் ஏகப்பட்ட பீட்டன்களுடனும் ஒரு பந்தில் கிளவ்வில் கடுமையாக அடி வாங்கியும் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார், முன்னதாக மொஹீந்தர் அமர்நாத் போல் பும்ரா, புவனேஷ்வர், இஷாந்த் ஷர்மாவின் ஸ்விங், வேகம் மற்றும் எழுச்சியை தைரியமாக, கடும் உத்திக்ளுடன் எதிர்கொண்ட ஆம்லா 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து பும்ராவின் லெக் திசை பந்தை நன்றாக மிடில் ஆஃப் த பேட்டில் பிளிக் செய்தார், ஆனால் பந்து காற்றில் எழும்ப டீப்பில் பாண்டியா பிடித்துப் போட்டார்.

பிலாண்டர் மிக அருமையாக பும்ராவை ஒரு புல்ஷாட்டும், ஷமியை ஒரு கட்ஷாட்டும் ஆடி பொறுமையைச் சோதித்து மீண்டும் ஒரு 35 முக்கிய ரன்களை எடுத்து ஷமி வீசிய பவுன்சரை ஹூக் செய்து பும்ராவின் மிக நல்ல கேட்சுக்கு வெளியேறினார். பெலுக்வயோ சிறந்த பேட்ஸ்மென்கள் இந்தப் பிட்சில் கனவு காணும் இரண்டு அற்புதமான ஆஃப் திசை பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்து பும்ராவின் நேர் புல்டாஸுக்கு எல்.பி.ஆனார். ஆனால் புல்டாஸில் நேராக காலில் வாங்கி அதை ரிவியூ செய்து தமாஷ் காட்டினார். மோர்கெல் ஒரு பிளிக், ஒரு நேர் பவுண்டரி என்று 9 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இங்கிடி படேலிடம் கேட்ச் கொடுத்து பும்ராவின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். 65.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x