Published : 08 Jan 2018 06:06 PM
Last Updated : 08 Jan 2018 06:06 PM

2 அவுட் தீர்ப்பு, 2 மேல்முறையீடு 2 தப்புதல்; வாய்ப்பைப் பயன்படுத்தாத விஜய் அவுட்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் 208 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது.

ஆக்ரோஷமான பந்து வீச்சுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்காக 30 ரன்கள் சேர்த்துள்ளனர், சற்றுமுன் ஷிகர் தவண் 20 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் மோர்னி மோர்கெல் வீசிய எகிறு பந்துக்கு அரைகுறையாக புல்ஷாட்டும் இல்லாமல் தடுப்பாட்டமும் இல்லாமல் என்னவோ ஆட மட்டையில் பட்டு ஆஃப் திசையில் கல்லியில் கிறிஸ் மோரிஸ் (ஸ்டெய்னுக்கு பதிலி வீரர்) கையில் கேட்ச் ஆனது. சுருங்கக்கூறின் தவனை  பவுன்ஸ் அவுட் செய்தார் மோர்கெல்.

சற்று முன் முரளி விஜய் 32 பந்துகள் போராடி 2 அருமையான பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டரின் அருமையான அவுட் ஸ்விங்கரில் வீழ்ந்தார். கொஞ்சம்தான் ஸ்விங் ஆனது, விஜய் ஆடப்போக அது மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசைக்கு கேட்சாகச் செல்ல டிவில்லியர்ஸ், 3வது ஸ்லிப்பிலிருந்து இடது பக்கமாக டைவ் அடித்து 2-வது ஸ்லிப்புக்கு முன்பு விழுந்து பிடித்தார், அருமையான கேட்ச். இந்தியா 30/2. மீண்டுமொருமுறை நடுவரிசை வீரர்கள் புதிய பந்துக்கும், ஆக்ரோஷ வீச்சுக்கும் எதிராக வரத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக பிலாண்டர் பந்தில் ஸ்டம்ப் லைனில் நேராக கால்காப்பில் வாங்கினார், களநடுவர் அவுட் கொடுத்தார், விஜய் ரிவியூ செய்தார், பந்து ஸ்டம்ப் திசைக்கு சற்றே வெளியேயும் உள்ளேயும் பிட்ச் ஆகியிருந்தது, பைல்களை பெயர்ப்பதாக ரீப்ளே காட்டியது, உண்மையில் பார்த்தால் ‘அம்பயர்ஸ் கால்’ அவுட் என்றுதான் 3-வது நடுவர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் நாட் அவுட் என்றார், தப்பினார் விஜய்.

இன்னொரு முறை மீண்டும் பிலாண்டர் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனதாக ஒரு அவுட் முறையீடு எழுந்தது அப்போதும் நடுவர் அவுட் கொடுத்தார், இம்முறையும் விஜய் ரிவியூ செய்தார், பேட் கால்காப்பில் பட்ட சப்தம் என்று தெரியவர நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார் 3-வது நடுவர், ஆகவே இருமுறை அவுட் தீர்ப்பு, இருமுறை ரிவியூ, இருமுறை தப்பிப்பு, ஆனால் வாய்ப்புகளைப் பயன்படுத்தாத விஜய் கடைசியில் பிலாண்டர் பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார். 2 முறை பிழைத்த பின்பு தடுப்பாட்டம் ஆடக்கூடாது, 2, 3 அதிரடி ஷாட்களை ஆடியிருக்க வேண்டும்.  ‘பம்மல்’ கடைசியில் அவுட்டில் முடிந்தது.

கடைசியாக செடேஸ்வர் புஜாரா, 4 ரன்களில் மோர்னி மோர்கெல் பந்தில் மட்டையின் விளிம்பில் பட்டு டிகாக்கிடம் கேட்ச் ஆனார். பந்து உள்ளே வந்தது ஆனால் கோணத்தில் சற்றே வெளியே சென்ற பந்துதான், பின்னால் சென்று தடுத்தாடினார் புஜாரா, ஆனாலும் எட்ஜ் ஆனது, அபாரமான பந்து, ஆகவே அவுட். இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி 12 ரன்களுடனும், ரோஹித் சர்மா 4 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி பம்மாமல் அடித்து ஆடினால் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சின் கட்டுக்கோப்பையும், துல்லியத்தையும் முறியடித்து தோல்வி பயத்தை ஏற்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x