

சென்னை யுனைடெட் வெட்டிரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற குளோபல் வெட்டிரன்ஸ் கால்பந்து போட்டியில் சென்னை யுனைடெட் வெட்டிரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா, இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை ஜவா ஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவும், மாலத்தீவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. 16-ம் தேதி மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து சாம்பியன் ஆனது. இந்திய அணி தரப்பில் ராமன் விஜயன் கோலடித்தார்.
பரிசளிப்பு விழாவில் டிஐஜி (சிபிசிஐடி, எஸ்.ஐ.டி) ஜான் நிக்கல்சன் கலந்து கொண்டு சென்னை யுனைடெட் வெட்டிரன்ஸ் அணிக்கு கோப்பையை வழங் கினார். அடுத்த ஆண்டு குளோபல் கால்பந்து போட்டியை மாலத்தீவு நடத்துகிறது.