Published : 26 Dec 2023 08:14 AM
Last Updated : 26 Dec 2023 08:14 AM
செஞ்சுரியன்: கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இன்று தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்த 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி என்று பெயர் வருவதற்கு பல்வேறு சுவாரஸ்யமான வரலாறுகள் உண்டு.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ம் தேதி அன்று அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு 'பாக்சிங் டே' என்று அழைக்கின்றனர்.
தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் முந்தைய காலங்களில் இருந்தே இருந்து வருகிறது. இதன் அடையாளமாகவும் இந்த 'பாக்சிங் டே' பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, அன்றைய தினத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என்று அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' தினத்தில் ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டி கண்டிப்பாக சர்வதேச அளவில் நடைபெறும். இதேபோல் நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பாக்சிங் டே அன்று ஏதாவது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும்.
இன்று தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுவதைப் போலவே, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT