Published : 25 Dec 2023 07:14 AM
Last Updated : 25 Dec 2023 07:14 AM

புதிதாக தேர்வான மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட்: மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண்சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாதுஎன்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்,பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்து வலியுறுத்தினர்.

இதனிடையே, மல்யுத்த கூட்டமைப்பின்தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரிஜ் பூஷண் விவ காரத்தில் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால்தேர்தல் நடத்துவது தள்ளிப்போய்விட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்தகூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை(டிசம்பர் 21) நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றிபெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாககுழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றுள்ளனர்.

இதனால் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்தியமல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்த இருவரை தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபட போவதில்லை என அறிவித்தார்.

இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அவசர கதியில் தேசியப் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறி அமைப்பை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும்என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம்: இதனிடையே மல்யுத்த சம்மேளனத்தை நடத்துவதற்கு ஒரு தற்காலிகக் குழுவை அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஓஏ தலைவருக்கு ஒரு கடிதத்தை மத்திய அமைச்சகம் எழுதியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x