

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 219 ரன்களும், இந்தியா 406 ரன்களும் எடுத்தன. 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது ஆஸி. அதில் 261 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனால் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
18.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக பூஜா, ஸ்னே ராணா, தீப்தி சர்மா, ஷெபாலி, ஸ்மிருதி, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ஸ்னே ராணா வென்றார். மொத்தமாக 7 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி இருந்தது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியையும் தற்போது வீழ்த்தி உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.