

திருப்பூர்: திருப்பூர் புதுராம கிருஷ்ணா புரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி சஸ்மிதா. இவர் திருப்பூர் அணைக் காட்டில் தந்தை செந்தில் குமார், தாய் மஞ்சுளா தேவியுடன் வசித்து வருகிறார்.
தந்தை பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாகவும், தாய் வேஸ்ட் குடோனில் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் இவர்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே ஜீவனம் நடத்தக்கூடிய குடும்ப சூழல். இந்நிலையிலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று திரும்பியுள்ளார் சஸ்மிதா.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிறு வயது முதலே தற்காப்புக் கலையான கராத்தே மீது எல்லையில்லா ஆர்வம் உள்ளது. வறுமையான சூழலிலும் பல ஆண்டுகளாக இடை விடாத பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். இந்நிலையில், புதுடெல்லி சத்தரசால் மைதானத்தில் டிசம்பர் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 150 கராத்தே பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் திருப்பூர் வி-கராத்தே அகாடமி நிறுவனர் ஷிகான் லி.விஸ்வ நாத் தலைமையில் தமிழ்நாடு சார்பில் நான் பங்கேற்று, 17 வயது மற்றும் 52 கிலோ எடைப் பிரிவுக்கு உட்பட்ட போட்டிகளில் வெண்கலம் வென்றேன்.
திருப்பூரில் மாவட்ட அரசுப் பள்ளி மாணவி தேசிய போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை எனக் கூறி பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பயிற்சியாளர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது, இனி வரும் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.