

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
டன்கன் பிளெட்சர் தலைமைப் பயிற்சியாளராக நீடித்தாலும், டம்மியாக இருக்கும் அவரை பிசிசிஐ நிர்வாகம் தற்போது அதிகாரபூர்வ டம்மியாக்கி விட்டதாக ஊடகங்களில் கருத்துகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.
பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜோ டேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரவர் பென்னி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னாள் வீரர்கள் சஞ்சய் பாங்கர் மற்றும் முன்னாள் தமிழக/இந்திய கிரிக்கெட் வீரர் பாரத் அருண் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆர்.ஸ்ரீதர் என்பவர் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எப்போதெல்லாம் அணியின் 'இமேஜ்' சேதமடைகிறதோ அப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட் வாரியம் சாஸ்திரியை நியமிப்பது வழக்கம். இதற்கு முன்பு 2007 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா படுதோல்வி அடைந்து முதல் சுற்றுடன் நாடு திரும்பிய போது கிரெக் சாப்பல் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அப்போதும் வங்கதேசத் தொடருக்கு ரவி சாஸ்திரி மேலாளராக நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் பாங்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பயிற்சியாளராக அந்த அணியின் மிகப்பெரிய எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவர்.
தற்போதைய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கும் ஐபிஎல் புகழ் கரண் சர்மா, சஞ்சய் பாங்கர் கேப்டன்சியில் விளையாடியவர். தனது வளர்ச்சியில் சஞ்சய் பாங்கரின் பங்கை எப்போதும் கரண் சர்மா விதந்தோதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாரத் அருண் 2 டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவுடன் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு டெல்லியின் உன்முக்த் சந்த் தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபோது பாரத் அருண் பங்களிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆர்.ஸ்ரீதர் என்ற வீரர், ஐதராபாத் அணிக்கு லஷ்மணுடன் ஆடியவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளரும் இவரே.