Published : 18 Jan 2018 10:30 AM
Last Updated : 18 Jan 2018 10:30 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நுழைந்தார் ரபேல் நடால்; தோல்வியில் இருந்து தப்பித்தார் வோஸ்னியாக்கி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தோல்வியில் இருந்து தப்பித்தார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 52-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயரை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4, 7-6 (7/4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-வது சுற்றில் நடால், 28-ம் நிலை வீரரான போஸ்னியாவின் டமீர் ஸூம்கூரை சந்திக்கிறார்.

3-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் போராடி 178-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டோனால்டை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 15-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா 3-6, 6-3, 1-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் 51-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷாபோலோவையும், 6-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 58-ம் நிலை வீரரான போர்ச்சுக்கலின் ஜோவோ சோசாவையும், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7-5, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிரோசிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 49-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கேத்ரினா சினிகோவாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விட்டோலினா 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றில் நுழைந்தார். 3-வது சுற்றில் ஸ்விட்டோலினா, தனது சகநாட்டைச் சேர்ந்த மார்தா கோஸ்ட்யுக்குடன் மோதுகிறார்.

15 வயதான மார்தா 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஒலிவியா ரோகோவ்ஸ்காவை 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இதன் மூலம் 1996-ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்த வயதில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மார்தா. இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மெல்பர்ன் பார்க் மைதானத்தில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பதிவு செய்துள்ள அவர், இம்முறை தகுதி சுற்றின் வாயிலாக பிரதான சுற்றில் கால்பதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பட்டம் வெல்பவர்களில் ஒருவராக கருதப்படும் 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 103-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் ஜனா பெட்டை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஜனா 3-6 எனவும் 2-வது செட்டை வோஸ்னியாக்கி 6-2 எனவும் கைப்பற்ற 3-வது செட் பரபரப்பானது. இதில் 1-5 என பின்தங்கியிருந்த வோஸ்னியாக்கி அதன் பின்னர் மீண்டெழுந்து ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் இந்த செட்டை 7-5 என தனதாக்கினார். முடிவில் 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றில் கால்பதித்தார் வோஸ்னியாக்கி.

7-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோ 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் சுனாவின் டயன் யிங்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 2-6, 3-6 என்ற செட் கணக்கில் உக்ரைனின் பாண்டரென்கோவிடமும், வீனஸ் வில்லியம்ஸை முதல் சுற்றில் வெளியேற்றிய சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லூக்ஸிகாவிடமும் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். - ஏஏப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x