

லாசான்: சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஹர்திக் சிங்கும், சிறந்த கோல்கீப்பர் விருதை சவிதா பூனியாவும் வென்றனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை, கோல்கீப்பர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய ஹாக்கி சங்கங்கள், ஹாக்கிஅணி கேப்டன், பயிற்சியாளர்கள், ரசிகர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் நிபுணர் குழுவின் வாக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகளை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் லாசான் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் 114 வாக்குகளைப் பெற்ற இந்திய அணியின் வீரர்ஹர்திக் சிங் சிறந்த வீரர் விருதைப்பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றதில் ஹர்திக் சிங் முக்கிய பங்கு வகித்திருந்தார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை இந்திய வீராங்கனை சவிதா பூனியா வென்றுள்ளார். இதே விருதை 2021, 2022-ம் ஆண்டுகளிலும் சவிதா வென்றிருந்தார்.