

காமன்வெல்த் போட்டியில் 100 மீ்ட்டர் ஓட்ட பந்தயத்தில் உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் பங்கேற்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 2009-ம் ஆண்டு 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். அவரது அதிகவேகத்தை காமன்வெல்த் போட்டியிலும் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
எனினும் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. காலில் காயம் ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் பயிற்சி மேற்கொண்டார்.
எனினும் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று மீண்டும் காயம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் மற்றொரு வீரர் பெய்லி தங்கம் வென்றார்.
எனினும் தொடர் ஓட்டத்தில் உசைன் போல்ட் பங்கேற்க இருக்கிறார். உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில் 8 தங்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.