

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிவில் இன்ஜினியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 23-ம் தேதிதொடங்குகிறது. சிவில் இன்ஜினியர்களுக்கான இந்த தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, வேலூர், திருவாரூர், காரைக்குடி ஆகிய 8 இடங்களில் லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் போட்டிகளில் 6 அணிகள்கலந்து கொள்ளும். இந்த வகையில் 8 இடங்களில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது கட்டமான கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படுகின்றன.
இந்த தொடருக்கான சீருடை மற்றும் கோப்பை அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன், ஆர்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி பார்த்தசாரதி, தமிழக விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மாநில தலைவர் எஸ்.நடேஷ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிவில் இன்ஜினியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.