Published : 20 Jan 2018 06:43 PM
Last Updated : 20 Jan 2018 06:43 PM

அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா வருத்தத்துடன் சாடியுள்ளார்.

கொல்கத்தா டெலிகிராப்பில் இது குறித்த பத்தி ஒன்றை குஹா எழுதியுள்ளார், அதில் விராட் கோலியின் கிரிக்கெட்டைப் பற்றி மனம் திறந்து பாராட்டிய ராமசந்திர குஹா, அவரது அதிகார அரசியல் குறித்து கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.

அவர் பத்தியிலிருந்து ஒரு சில பகுதிகள் இதோ:

நான் ஒருமுறை கோலியைச் சந்தித்திருக்கிறேன். மீண்டும் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பில்லை. அந்தச் சந்திப்பின் போது நான் அவரிடம் கண்டது, கடந்த கால. நிகழ்கால வீரர்களில் மிகவும் ஆட்படுத்தக்கூடிய ஒரு ஆளுமை விராட் கோலி. அவரிடம் ஒரு புத்தி சாதுரியம் உள்ளது (கிரிக்கெட்டில் மட்டுமல்ல), கவாஸ்கர் திராவிட் நன்றாக, தெளிவாக கருத்துகளை வெளிப்படுத்துவார்கள் ஆனால் கோலியின் ஆட்படுத்தக்கூடிய ஆளுமை அவர்களிடத்தில் இல்லை, கபில்தேவ், தோனியும் சமமான அளவில் வலுவான ஆளுமைகளே ஆனால் கோலியிடம் உள்ள வார்த்தை ஆதிக்கம் இவர்களிடம் இல்லை.

பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவில் நான் பணியாற்றிய அந்த 4 மாதங்களில் கோலியின் ஆதிக்கச் சுயம் எந்த அளவுக்கு விரிவும் ஆழமும் கொண்டது என்பதை உணர்ந்தேன். நரேந்திர மோடியை இந்திய அமைச்சரவையினர் வழிபடுவதை விட பிசிசிஐ அதிகாரிகள் கோலியை வழிபடுகின்றனர். இவரிடம் முழுதாக பணிந்து போகின்றனர் அதிகாரிகள். அதாவது எதிர்காலப் பயணத்திட்டம், தேசிய கிரிக்கெட் அகாடமி மேலாண்மை, ஆகியவற்றில் கூட கோலியின் அதிகார எல்லை நீண்டுள்ளது. இவையெல்லாம் கேப்டனின் வரம்புக்குள் இருப்பதல்ல.

இந்தியாவில் எந்தத் துறையாக இருந்தாலும் அரசியல், வர்த்தகம், கல்விப்புலம், விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும் வலுவான ஆளுமை சாதனை எனும் திட்பத்துடன் இணையும் போது நிறுவனத்தை விட தனிநபர்களின் அதிகாரம், ஆதிக்கம் வலுவடைவதை நாம் பார்க்கிறோம். நம் நாட்டில் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் மகத்துவத்துடன் சொந்த ஆளுமையும் உடைய வீரர்கள் விராட் கோலி அளவுக்கு யாரும் இல்லை. தனக்காக தன் அணிக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை இவரிடம் உள்ள அளவு வேறு யாரிடமும் இருந்ததில்லை. இவ்விதத்தில் இவருக்கு அருகில் வருவார் என்றால் அது அனில் கும்ப்ளேதான். கிரிக்கெட் வீரராகவும் குணாம்சத்திலும் கோலி லீகில் கும்ப்ளேதான் இருப்பார். அதனால்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு கும்ப்ளே விலக நேரிட்டது.

ரவிசாஸ்திரி தகுதி என்ன?

அனில் கும்ப்ளே இடத்தில் கேப்டனுக்கு நிகரான ஆளுமை, கிரிக்கெட் திறன் சார்ந்த சாதனை என்று எதுவும் இல்லாத தரநிலையில் குறைபட்ட ஒருவரை ஏன் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்? தவிரவும் பயிற்சியாளராக அனுபவமும் அவருக்கு இல்லை. காரணம் என்னவெனில், பிசிசிஐ போலவே உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டியின் தலைவர் (வினோத் ராய்) தனது சுதந்திரங்களை விராட் கோலியின் அதிகார ஆளுமையிடம் அடிபணியச் செய்து விட்டார். கிரிக்கெட் அணித்தேர்வு டாம் மூடிக்குப் பதிலாக ரவிசாஸ்திரியைத் தேர்வு செய்தது போல். வினோத் ராய், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோர் இந்திய கேப்டனின் மிரட்டல் ஆளுமைக்கு நிறுவனத்தை தனிநபர் அதிகாரத்துக்கு தாரை வார்த்தனர். இந்த முடிவின் பலன்கள் இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போது, பலவீனமான எதிரணியினருக்கு எதிராக திறம்பட மறைக்கப்பட்டது. ஆனால் இனி மறைக்க முடியாது.

ஏன் இப்போது கூற வேண்டியுள்ளது?

பிசிசிஐ வர்த்தக எண்ணத்தை விடுத்து கிரிக்கெட் ஆட்டத்தை பரிசீலித்திருந்தால் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டம் கூட இல்லாமல் சென்றிருக்க வேண்டி வந்திருக்காது. அணித்தேர்வுக்குழுவினர் நல்லவர்களாகவும் தைரியமானவர்களுமாக இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் 0-2 என்று தொடரை இழந்திருக்காது.

கோலி ஒரு அபாரமான இன்னிங்ஸை ஆடிய பிறகு இந்தக் கட்டுரையை நான் எழுதும் தருணம் பற்றி கோலி பக்தர்கள் புகார் தெரிவிப்பார்கள். ஆனால் தனிமனித மகத்துவம் நிறுவனமயமாக்கப்பட்ட இறுமாப்பாக மாறிவிடக்கூடாது என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இதுவே தருணம். அஜிங்கிய ரஹானே 2 டெஸ்ட்களிலும் ஆடியிருந்தால், புவனேஷ்வர் குமார் 2-வது டெஸ்ட்டில் ஆடியிருந்தால், இலங்கையுடன் இந்தியாவில் ‘கல்லி கிரிக்கெட்’ ஆடாமல் முன்னமேயே தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தால் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருக்கலாம்.

பிசிசிஐ-யும் அதன் சிலிர்ப்புக்-கவர்ச்சித் தலைவர்களும் உலக கிரிக்கெட்டின் மையம் இந்தியா என்று பேசிக்கொண்டிருக்கின்றனர், இது பணத்தளவில் சரி, ஆனால் கிரிக்கெட் ஆட்ட அளவில் நிச்சயம் இல்லை. பிசிசிஐ-யில் என்னுடைய பணிக்காலத்தை வைத்து நான் இந்த சோகமான முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது: இந்த ஆட்டம் இன்னும் திறம்பட நிர்வகிக்கப்பட்டிருந்தால் இந்திய அணி ஒரு தொடரைக்கூட இழந்திருக்காது என்பதையே.... பிசிசிஐ-யிடம் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. இந்த அளவுக்கு கிரிக்கெட் பித்து, பணபலம் இருக்கும் போது எப்போதுமே நிரந்தரமாக இந்திய அணிதான் எல்லா வடிவத்திலும் டாப் அணியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் இன்னமும் கூட இந்தியா போட்டிகளையும் தொடர்களையும் இழக்கிறது என்றால், 70 ஆண்டுகளாக முயன்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரைக்கூட வெல்ல முடியவில்லை என்றால் நிச்சயம் இதற்கான தவறு மோசமான நிர்வாகத்திடம்தான் உள்ளது.

ஊழல், தகுதியற்ற நபர்கள் பொறுப்பான பதவிகளுக்கு செல்வாக்குடன் வருவது ஆகிய நோய்க்கூறுகளுடன் 3-வது நோய்க்கூறும் இப்போது சேர்ந்துள்ளது, அதுதான் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம். கோலி கிரேட் பிளேயர், கிரேட் லீடர் ஆனால் அவரது அதிகார எல்லையை நிர்ணயிக்கும் தன்மை இல்லையெனில் கோலி தானும் தன் ரசிகர்கள் விரும்பும் உச்சத்தை எட்ட முடியாது...

தற்போதைய அணித்தேர்வாளர்கள் முந்தைய தேர்வாளர்கள் போல் கிரிக்கெட் ஆட்டத்தில் சாதித்தவர்கள் அல்லர். சாஸ்திரி நிறைய ஆடியுள்ளார், ஆனால் அவர் உண்மையான கிரேட் கிடையாது. அதனால் அவர் கேப்டனுக்கு அடிபணிவது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்றைய இந்திய கிரிக்கெட்டில் தேர்வுக்குழுவினர், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அனைவரும் கோலியின் முன் குள்ளர்களாக காட்சியளிக்கின்றனர். இது மாற வேண்டும். தேர்வாளர்கள் சாதித்த கிரிக்கெட் வீரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெரிய கிரிக்கெட் வீரர்களாக இல்லாவிடினும் கேப்டனின் அதிகாரத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் அதிகாரமும், ஆசையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியாளரும் தேவைப்படும் போது கேப்டனின் அதிகார வரம்பை நிர்ணயிப்பவராக இருக்க வேண்டும், உதாரணமாக அனில் கும்ப்ளே தரம்சலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை தேர்வு செய்து அது இந்திய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. நிர்வாகிகள் இந்திய அணி அயல்நாட்டில் நன்றாக ஆடுவதை உறுதி செய்யும் விதமாக கிரிக்கெட் காலண்டரை உருவாக்க வேண்டும். இதை விடுத்து தங்கள் ஈகோக்களையும் பர்ஸையும் மட்டுமே குறிவைத்து செயல்படுதல் கூடாது. தென் ஆப்பிரிக்க தொடர் 4 டெஸ்ட் போட்டிகளாக இருந்திருக்க வேண்டும், ஆனால் பிசிசிஐக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும் இருந்து வரும் மோதாலல் அது நடைபெறவில்லை.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற சவாலான இடங்களில் இந்திய அணி போட்டிகளையும் தொடர்களையும் வென்றால்தான் உண்மையில் இந்த அணி கிரேட் அணியாக இருக்க முடியும். கேப்டனின் அகந்தையும் அதிகாரமும் அவரது சொந்த வெற்றிக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம் ஆனால் அது அமைப்பின் வெற்றியாக மாற வேண்டுமானால் அந்த அதிகாரம், அகந்தை கொஞ்சம் தட்டி வைக்கப்படுவது அவசியம்.

என்னுடைய லெவனில் கேப்டனாகவே கோலி முடிய வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x