Published : 14 Dec 2023 04:58 AM
Last Updated : 14 Dec 2023 04:58 AM

கடைசி டி20-ல் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி?

இந்திய அணி வீரர்கள்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசிமற்றும் 3-வது டி 20 ஆட்டம் இன்றுஇரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே டி 20 தொடரை சமன் செய்யமுடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்திய அணி. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டர்பனில் நடைபெறஇருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வதுஆட்டம் இன்று இரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட 2-வதுஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களும் விளாசினர். திருத்தி அமைக்கப்பட்ட 152 ரன்கள் (15 ஓவர்கள்) இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 13.5ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு154 ரன் எடுத்து வெற்றி கண்டது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்களும், கேப்டன் எய்டன்மார்க்ரம் 17 பந்துகளில் 30 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளஇந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.

2-வது ஆட்டத்தில் பந்து வீச்சில்இந்திய அணி வீரர்கள் தாக்கத்தைஏற்படுத்தத் தவறினர். அர்ஷ்தீப்சிங் தனது முதல் ஓவரிலேயே 24 ரன்களை தாரை வார்த்தார்.அதிரடியாக விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 3.4 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. முகமது சிராஜ், முகேஷ் குமார், குல்தீப்யாதவ் ஆகியோரும் முதல் 6 ஓவர்களுக்குள் அதிக ரன்களை கசியவிட்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச டி 20 ஆட்டத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக செயல்படத் தவறினார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சுவெளிப்படக்கூடும். 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நடு ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பதில் சற்று தேக்க நிலையை சந்தித்தது. எய்டன்மார்க்ரம், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் கூட்டாக வீசிய 7 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இவர்களது பந்து வீச்சு இந்திய அணியின் ரன் குவிப்பை வெகுவாக மட்டுப்படுத்தியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நடு ஓவர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றுதொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கக்கூடும். 2-வது ஆட்டத்தில் வேகப் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x