Published : 13 Dec 2023 06:56 AM
Last Updated : 13 Dec 2023 06:56 AM

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரை இறுதியில் உத்தம் சிங் தலைமையிலான இந்திய அணி, ஜெர்மனியை சந்திக்கிறது.

கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகிடைத்தது. இதை டிமோ போயர்ஸ் கோலாக மாற்ற நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 16-வது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பெபின் வான் டெர் ஹெய்டன் கோலாக மாற்ற முதல் பாதியின் முடிவில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கூடுதல்ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். இதன் விளைவாக 34-வது நிமிடத்தில் ஆதித்யா அர்ஜூன் லாலாக்,பீல்டு கோல் அடித்து அசத்தினார். அடுத்த நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்தது. இதில் அராய்ஜீத் சிங் ஹுண்டல் கோல் அடித்து அசத்த ஆட்டத்தை 2-2 என சமநிலையை அடையச் செய்தது இந்திய அணி.

44-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஆலிவர் ஹோர்டென்சியஸ் கோல் அடிக்க நெதர்லாந்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 52-வது நிமிடத்தில் இந்திய அணியின் சவுரப் குஷ்வாஹா பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 3-3 என சமநிலையை எட்டியது. போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் உத்தம் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்க நெதர்லாந்து அணி கடுமையாக போராடியது. ஆனால் இந்திய அணியின் தடுப்பு அரண்களை கடந்து அந்த அணி வீரர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து வலுவான நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் இந்திய அணியின் டிபன்ஸ் வலுவாக இருந்தது. குறிப்பாக ரோஹித்,நெதர்லாந்து அணியின் 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்கள் விழ விடாமல் அற்புதமாக தடுத்தார். சிறப்பாக செயல்பட்ட அவர், ஆட்ட நாயகனாக தேர்வானார். நாளை (14-ம் தேதி) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x