

துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த நேபாளம் அணியானது ராஜ் லிம்பானியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22.1 ஓவர்களில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் தாமி 8, தீபக் போஹாரா 7, அர்ஜூன் குமல் 7 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 9.1 ஓவரை வீசி 3 மெய்டன்களுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். பரோடாவை சேர்ந்த 18 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளரான லிம்பானி தனது இன்ஸ்விங்களால் நேபாள அணியின் பேட்ஸ்மேன்களை களத்தில் செட்டில் ஆக விடவில்லை. அவருக்கு உறுதுணையாக பந்து வீசியஆராத்யா சுக்லா 2 விக்கெட்களையும், அர்ஷின் குல்கர்னி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
53 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அர்ஷின் குல்கர்னி 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்களும் ஆதர்ஷ் சிங் 13 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களும் சேர்த்தனர். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது.
‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் அணி 3ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துஅரை இறுதியில் கால் பதித்தது.அந்த அணி தனது கடைசி லீக்ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானை 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.