கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டி: பிளேடு ஓட்டத்தில் தங்கம் வென்றார் ராஜேஷ்

கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டி: பிளேடு ஓட்டத்தில் தங்கம் வென்றார் ராஜேஷ்
Updated on
1 min read

புதுடெல்லி: முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிளேடு ஓட்டப்பந்தய வீரரான கே.ராஜேஷ் 200 மீட்டர் ஓட்டத்தில் (டி 64 பிரிவு) கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் நீளம் தாண்டுதலில் 5-வது இடத்தை பிடித்தார். ராஜேஷ் சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பயின்று வருகிறார்.

10 மாத குழந்தையாக இருக்கும் போது ராஜேஷ் தனது காலை இழந்துள்ளார். அவரது கால்களில் ஏற்பட்ட தொற்று காரணமாக பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருந்து செலுத்தும் போது, காலில் ஊசி உடைந்து விஷம் பரவி உள்ளது. இதையடுத்து அவருடைய உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் காலை துண்டித்துள்ளனர்.

குழந்தை பருவத்திலேயே காலை இழந்தாலும் ராஜேஷ் நம்பிக்கையை இழக்கவில்லை. செயற்கை காலுடன் வாழ்க்கை பாதையில் பயணித்த நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் போது அவரது பெற்றோர் பிரிந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவரையும், இரட்டை சகோதரரையும் தாத்தா, பாட்டி வளர்த்துள்ளனர். ராஜேஷின் தாத்தா ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். தனது வருமானத்தில் பேரன்கள் இருவரையும் கவனித்து வந்துள்ளார்.

கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ராஜேஷ் கூறும்போது, “2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றதை டி.வி-யில் பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டது. நானும் அவரை போன்று பாராலிம்பிக்கில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கருதினேன்.

இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் பிளேடு அணிந்து கொண்டு ஓட்ட பயிற்சிகளை தொடங்கினேன். நீளம் தாண்டுதல் பிரிவில் உலக சாதனை படைத்த ஜெர்மன் பாரா நீளம் தாண்டுதல் வீரர் மார்கஸ் ரெஹ்மைப் போல இருக்க விரும்புகிறேன். இதுவரை இரு முறை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். கடந்த மார்ச் மாதம் புனேவில் நடைபெற்ற 21-வது தேசிய பாரா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.

இதன் பின்னர் தமிழக அரசு எனக்கு ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள புதிய பிளேடுகளை வழங்கியது. பாராலிம்பிக் மற்றும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன்.

வரும் ஜனவரி 9 முதல் 15-ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ள தேசிய பாரா விளையாட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறேன். இதன் பின்னர் பிப்ரவரியில் துபாயில் நடைபெறஉள்ள கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு என்னை தயார்படுத்திக் கொள்வேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in