Published : 11 Dec 2023 08:34 AM
Last Updated : 11 Dec 2023 08:34 AM

WI vs ENG ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ரொமாரியோவின் அதிரடியால் வென்றது மே.இந்தியத் தீவுகள் அணி

பார்படோஸ்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரொமாரியோ சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்துஒருநாள் தொடரை வெல்லப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி இந்த ஆட்டம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டக்கெட், 73 பந்துகளில் 71 ரன்கள் குவித்து, ரொமாரியோ ஷெப்பர்ட் பந்துவீச்சில் பிரண்டன் கிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். லிவிங்ஸ்டன் 45, சால்ட் 4, வில் ஜாக்ஸ் 17, ஜாக் கிராவ்லி 0, ஹாரி புரூக் 1, ஜாஸ் பட்லர் 0, சாம் கரண் 12, ரெஹான் அகமது 15, கஸ் அட்கின்சன் 20, மேத் போட்ஸ் 15 ரன்கள் சேர்த்தனர். முடிவில் அந்த அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

மேற்கு இந்தியத் தீவு அணி தரப்பில் மேத்யூ போர்ட், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் மேற்கு இந்தியத் தீவு அணி தனது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னர் மீண்டும் மழை பெய்து குறுக்கீடு செய்தது. இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது மேற்கு இந்தியத் தீவு அணிக்கு 34 ஓவர்களில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

மேற்கு இந்தியத் தீவு அணியின் அலிக் அத்தானஸ் 45 ரன்களும், கீசி கார்ட்டி 50 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த ஷாய் ஹோப் 15, ஷிம்ரன் ஹெட்மயர் 12, ஷெர்பான் ருதர்போர்ட் 3 ரன்களில் வீழ்ந்தனர்.

இருந்தபோதும் ரொமாரியோ ஷெப்பர்ட் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டினார். அவர் 28 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் மேத்யூ போர்ட் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 31.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து மேற்கு இந்தியத் தீவு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை மேற்கு இந்தியத் தீவு அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாயினர். தற்போது ஒருநாள் போட்டித் தொடர் முடிந்த நிலையில், நாளை (டிசம்பர் 12) இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவு அணிகள் இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கவுள்ளது.

முதல் போட்டி டிசம்பர் 12-ம் தேதி பார்படோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2-வது போட்டி டிசம்பர் 14-ல் கிரெனடாவிலும், 3-வது போட்டி டிசம்பர் 16-ல் கிரெனடாவிலும், 4-வது போட்டி டிசம்பர் 19-ல் டிரினிடாட்டிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி டிரினிடாட்டில் டிசம்பர் 21-லும் நடைபெறவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x