ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர்: அரை இறுதியில் டான் போஸ்கோ,ஜெயேந்திர சரஸ்வதி அணிகள் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஏவிஎம் ராஜேஷ்வரி - ஸ்ரீரங்கம் பள்ளி பலப்பரீட்சை

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர்: அரை இறுதியில் டான் போஸ்கோ,ஜெயேந்திர சரஸ்வதி அணிகள் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஏவிஎம் ராஜேஷ்வரி - ஸ்ரீரங்கம் பள்ளி பலப்பரீட்சை
Updated on
1 min read

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் தொடரின் 4-வது நாளான நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு ஆட்டத்தில் கடலூர் ஜவஹர் சிபிஎஸ்இ - மதுரை லே சாட்லியர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜி.ஏ.ஹரிஷ் கிருஷ்ணா 22 ரன்கள் சேர்த்தார். லே சாட்லியர் அணித் தரப்பில் பிரபுல் பண்டாரி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களையும், லாரன் நிகிலன் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

107 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லே சாட்லியர் அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஐ.செல்வா 24, கிளென் ஐசக் தியோபால்டு 24 ரன்கள் சேர்த்தனர். ஜவஹர் சிபிஎஸ்இ அணித் தரப்பில் ஏ.அஷ்வத் 3 விக்கெட்களையும், ஆர்.கீர்த்திஷ்வர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கிளென் ஐசக் தியோபால்டு தேர்வானார். சென்னை ஏவிஎம் ராஜேஷ்வரி மெட்ரிக்குலேசன் - திருப்பூர் கே.எஸ்.சி. அரசு பள்ளி அணிகள் இடையிலான ஆட்டமும், சென்னை டான் போஸ்கோ - திருச்சி ஸ்ரீரங்கம் ஆடவர் மேல்நிலைப் பள்ளி அணிகள் இடையிலான ஆட்டமும் மழை காரணமாக ரத்தானது. இதையடுத்து இந்த 4 அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை டான் போஸ்கோ, கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன், சென்னை ஏவிஎம் ராஜேஷ்வரி, ஸ்ரீரங்கம் ஆடவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் டான் போஸ்கோ - ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஏவிஎம் ராஜேஷ்வரி - ஸ்ரீரங்கம் ஆடவர் மேல்நிலைப்பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in