

2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட்டில் இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி எடுத்த 133 ரன்கள் இன்னிங்ஸ்தான் விராட் கோலியின் ஆகச் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வாசகர்கள் கருத்துக் கணிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோலி எடுத்த 50 ஒருநாள் சர்வதேச சதங்களில் ஹோபார்ட் சதமே ஆகச் சிறந்தது என்று ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.
மிர்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்களைக் கோலி எடுத்தார். இந்த இன்னிங்ஸுக்கும் ஹோபார்ட் இன்னிங்ஸுக்கும் கடும் போட்டி. ஆனால், கடைசியில் 64% வாக்குகளை வென்று கோலியின் ஹோபார்ட் சதமே சிறந்த சதமாகத் தேர்வு செய்யப்பட்டது. அன்று இலங்கை அணி நிர்ணயித்த இலக்கு 321 ரன்கள். ஆனால், கோலியின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சினால் 321 ரன்கள் இலக்கு, 36.4 ஓவர்களில் முடிந்து விட்டது. இலங்கைதான் பொதுவாக இப்படி சேசிங் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால், அன்று இலங்கையின் சேசிங் பாடத்தை அவர்களுக்கே நடத்திக் காட்டினார் விராட் கோலி.
அதுவும் மலிங்காவை ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசி, அவரது பந்து வீச்சைப் புரட்டி எடுத்தது கண்கொள்ளாக் காட்சியாகும். அதாவது, அன்று 40 ஓவர்களில் அந்த இலக்கை எட்டினால்தான் போனஸ் புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலை. இதன்மூலம் சிபி தொடர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த ஹோபார்ட் சதம் கோலியின் 9-வது சதமாகும். இதில் சேசிங்கில் 6-வது சதம். அப்போதே 2012-ல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸாக இந்த இன்னிங்ஸ் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இன்னிங்ஸில் விராட் கோலி மொத்தம் 86 பந்துகளையே சந்தித்து 133 ரன்களை விளாசினார். அதில் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். சேவாக் 16 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் விளாசியும், சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 39 ரன்கள் விளாசியும், கம்பீர் 64 பந்துகளில் 63 ரன்களை விளாசியும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 24 நாட் அவுட். லசித் மலிங்காவின் மிக மோசமான தினமாக அன்று அமைந்தது. அவர் 7.4 ஓவர்களில் 96 ரன்கள் விளாசப்பட்டார். கைங்கரியம் விராட் கோலி.
மிர்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி விளாசிய 183 ரன்கள் விளாசல் 2012-ம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியில் எடுக்கப்பட்டதாகும். இதில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து ஹபீஸ் (105) நசீர் ஜாம்ஷெட் (112) ஆகியோரது சதங்கள் மூலம் 329/6 என்று பெரிய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி களமிறங்கிய போது கம்பீர் டக் அவுட் ஆனார். சச்சின் டெண்டுல்கர் 5 பவுண்டரி 1 சிச்கருடன் 48 பந்துகளில் 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பிறகு கோலி, ரோஹித் சர்மா (68) ஜோடி சேர்ந்தனர். 172 ரன்களை இருவரும் விளாசித் தள்ளினர். விராட் கோலி 148 பந்துகளில் 22 பவுண்டரி 1 சிக்சருடன் 183 ரன்களை விளாசினார். 47.5 ஓவர்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனாலும், கோலியின் ஹோபார்ட் இன்னிங்ஸ்தான் பிட்ச், போட்டித் தொடரின் நெருக்கடித் தன்மை இறுதிக்குள் நுழைய தேவையான போனஸ் புள்ளிகள் என்று பலதரப்பட்ட நெருக்கடிகளுடன் ஆடப்பட்ட கிரேட் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை, ரசிகர்கள் சரியான இன்னிங்ஸையே தேர்வு செய்துள்ளனர்.