

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மிர்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 66.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணிமுதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 4, ஹென்றி நிக்கோல்ஸ் 1, டேவன் கான்வே 11, டாம் பிளண்டல் 0, கேன் வில்லியம்சன் 13 ரன்களில் வெளியேறினர்.
டேரில் மிட்செல் 12, கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்றுமுன்தினம் மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேரில் மிட்செல் 18 ரன்களில் நயீம் ஹசன் பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் 1, கைல் ஜேமிசன் 14 ரன்களில் நடையை கட்டினர்.
ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் அரை சதத்தை கடந்தார் கிளென் பிலிப்ஸ். அவரது மட்டை வீச்சால் நியூஸிலாந்து அணி 35-வது ஓவரில் 172 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. சிறப்பாக விளையாடி வந்த கிளென் பிலிப்ஸ் 72 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஷோரிபுல் இஸ்லாம் பந்தில் விக்கெட் கீப்பர் நூருல் ஹசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
கடைசி வீரராக கேப்டன் டிம் சவுதி 14 ரன்களில் தைஜூல் இஸ்லாம் பந்தில் நடையை கட்ட நியூஸிலாந்து அணி 37.1 ஓவரில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் அணி தரப்பில் மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஷோரிபுல் இஸ்லாம், நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 8 ரன்கள்பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை வங்கதேச அணி விளையாடியது.
மஹ்முதுல் ஹசன் ராய் 2, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 15ரன்களில் ஆட்டமிழந்தனர் வங்கதேச அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தபோது போதியவெளிச்சம் இல்லாத காரணத்தால் 3-ம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஜாகீர் ஹசன் 16,மொமினுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர். கைவசம் 8விக்கெட்கள் இருக்க வங்கதேச அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.