

டர்பன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ்.
‘மிஸ்டர் 360’ என அறியப்படுபவர் டிவில்லியர்ஸ். அதற்கு காரணம் அனைத்து கோணத்திலும் அவர் ஆடும் ஷாட்கள். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். அதுதவிர 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 156 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
“எனது வலது கண்ணில் நான் பார்வை திறனை இழந்து வந்த நேரம் அது. எனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் கடைசி இரண்டு ஆண்டுகள் இடது கண்ணை மட்டுமே பயன்படுத்தி விளையாடினேன். எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அதை கேட்டு ஆச்சரியமடைந்தார்.
எனது கிரிக்கெட் வாழ்வில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெற்ற தோல்வி வலி கொடுத்தது. அதே நேரத்தில் பார்வை திறன் காரணமாக 2018-ம் ஆண்டுடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற விரும்பினேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விரும்பினேன். என் மீது எந்தவித புகழ் வெளிச்சமும் வேண்டாம் என விரும்பிய காரணத்தால் ஓய்வு பெற்றேன். எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பானதாக அமைந்தது. நன்றி” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ல் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் மீண்டும் விளையாட வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுவும் 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஓராண்டுக்கு முன்னதாக ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.