Published : 06 Dec 2023 06:12 AM
Last Updated : 06 Dec 2023 06:12 AM

ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கொரியாவை வீழ்த்தியது இந்திய அணி

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கொரியாவுடன் மோதியது. 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அராய்ஜீத் சிங் ஹுண்டல் கோலாக மாற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 16-வது நிமிடத்தில் அராய்ஜீத் சிங் ஹுண்டலும், 30-வது நிமிடத்தில் அமன்தீப்பும் பீல்டு கோல் அடித்து அசத்த முதல் பாதியில் இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையை அடைந்தது. 38-வது நிமிடத்தில் கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் வீரர் தோஹ்யுன் லிம் கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த 3-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது.

41-வது நிமிடத்தில் அராய்ஜீத் சிங் ஹுண்டல் பீல்டு கோல் அடித்து மிரட்ட இந்திய அணி 4-1 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இந்திய அணியின் ஆட்டத்தில் சிறிது தேக்க நிலை காணப்பட்டது. 45-வது நிமிடத்தில் கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை மின்க்வோன் கிம் கோலாக மாற்ற கொரிய அணி 2-4 என சற்று நெருங்கி வந்தது. ஆனால் மேற்கொண்டு அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் நாளை (7-ம் தேதி) மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x