

2016 - 17 ஆண்டுக்கான ஐசிசி ஆண்டு விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி பெற்றுள்ளார்.
செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கபப்ட்டது. இதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,203 ரன்களை (77.80 சராசரி) குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். அதே காலகட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் 1,818 ரன்களை குவித்துள்ளார் (82.63 சராசரி). இதில் 7 சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் 299 ரன்களை எடுத்துள்ளார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியதும் விராட் கோலி தலைமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுகளோடு, ஐசிசி-ன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய கோலி, "ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை பெறுவது மிகப்பெரிய விஷயம். மேலும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதும் பெரிய விஷயமே. 2012ல் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றேன். ஆனால் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். உலக கிரிக்கெட்டில் இது பெரிய கவுரவம் என நினைக்கிறேன். அதை இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்து பெறுவது இன்னும் விசேஷமானது" என்றார். கடந்த வருடம் இந்த விருதை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி-ன் டெஸ்ட் அணி டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக் (விக்கெட்கீப்பர்), அஸ்வின், ஸ்டார்க், ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐசிசி-ன் ஒருநாள் அணி டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), பாப்ர் அசாம், டிவில்லியர்ஸ், டி காக் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித் கான், பும்ரா |
ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்சொன்ன காலகட்டத்தில் அவர் 1876 ரன்களை 16 டெஸ்ட் போட்டிகளில் குவித்துள்ளார் (சராசரி 78.12). இதில் 8 சதங்களும், 5 அரை சதங்களும் அடங்கும்.
ஐசிசி தரவரிசையில் ஸ்மித் 947 புள்ளிகளை பெற்றுள்ளார். சர் டான் ப்ராட்மேன் எடுத்திருந்த உச்சபட்ச 961 புள்ளிகளை எட்ட இன்னும் 14 புள்ளிகளே தேவை. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான தேர்வில் அஸ்வின், புஜாரா, கோலி, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களும் இருந்தனர். இவர்களை ஸ்மித் முந்தியுள்ளார்.
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 25 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த ஆட்டத்தின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் சாஹல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பந்துவீச்சே இதுவரை டி20 போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். சாஹலின் இந்த ஆட்டம் சிறந்த டி20 ஆட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான், ஐசிசி-ன் சிறந்த அசோசியட் கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்றார். ரஷித் கான் 2017ல் மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.