Published : 05 Dec 2023 08:15 AM
Last Updated : 05 Dec 2023 08:15 AM
ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணி இந்தவார இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 டி 20 போட்டி, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 10-ம் தேதி டர்பன் நகரில் நடைபெறுகிறது. 2-வதுஆட்டம் 12-ம் தேதி கெபெர்ஹாவிலும், கடைசி மற்றும் 3-வது டி 20 ஆட்டம் 14-ம்தேதி ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் 17-ம்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 19-ம்தேதி கெபெர்ஹாவிலும், கடைசி மற்றும் 3-வது ஆட்டம் பார்ல் நகரிலும் நடைபெறுகிறது. இதன்பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை செஞ்சுரியன் நகரிலும், 2-வதுமற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேப்டவுன் நகரிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கேப்டன் தெம்பா பவுமா, வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தெம்பா பவுமா இல்லாததால் அவருக்கு பதிலாக டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவார் எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஹெய்ன்ரிச் கிளாசனுக்கு டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரால்டு கோட்ஸி, மார்கோ யான்சன், லுங்கி நிகிடி ஆகியோருக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஓய்வுவழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் டி தொடரின் முதல் இரு ஆட்டங்களுக்கான அணியிலும், டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் மிதவேகப்பந்து வீச்சாளர் ஓட்னியேல் பார்ட்மேன் மற்றும் ஆல்ரவுண்டர் மிஹ்லாலி பொங்வானா ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பேட்ஸ்மேனான டேவிட் பெடிங்ஹாம் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும், வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் 3 வடிவிலான போட்டிகளிலும் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
அணிகள் விவரம் - டி20: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியேல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸி (முதல் இரு டி20 போட்டி), டோனோவன் ஃபெரைரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன் (முதல் இரு டி20 போட்டி), ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி (முதல் இருடி20 போட்டி), ஆண்டில் பெலுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாத் வில்லியம்ஸ்.
ஒருநாள் போட்டி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியேல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி, ரீசாஹென்ரிக்ஸ், ஹெய்ன்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி பொங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டில் பெலுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ராஸ்ஸி வான் டெர் டஸன், கைல் வெர்ரைன், லிசாத் வில்லியம்ஸ்.
டெஸ்ட் போட்டி: தெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸி, டோனி டி ஜோர்சி, டீன் எல்கர், மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT