

தாணே: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகம், ம.பி. அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரிலுள்ள தாதோஜி கோன்டேவ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய தமிழக அணி 49.5 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணி தரப்பில் பாபா இந்திரஜித் அபாரமாக விளையாடி 92 ரன்கள் குவித்து ரன்-அவுட்டானார். 115 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் இந்த ரன்களைச் சேர்த்தார்.
சாய் சுதர்ஷன் 21, என்.ஜெகதீசன் 16, பிரதோஷ் பால் 31, விஜய் சங்கர் 4, கேப்டன் தினேஷ் கார்த்திக் 3, அபராஜித் 2, சாய் கிஷோர் 12, எம். சித்தார்த் 0, வருண் சக்ரவர்த்தி 1, டி. நடராஜன் 1 ரன்கள் எடுத்தனர்.
மத்தியபிரதேச அணி தரப்பில் கேப்டன் ஷுபம் சர்மா, ராகுல் பதம், சரண்ஷ் ஜெயின் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். குமார் கார்த்திகேயா, மிஹிர் ஹிர்வாணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்தியபிரதேச அணி விளையாடியது. ஆனால் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி, டி.நடராஜன், பாபா அபராஜித் ஆகியோரது பந்துவீச்சில் மத்தியபிரதேச அணி விக்கெட்களை விரைவாக இழந்து தோல்வியைச் சந்தித்தது.
47.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் தமிழக அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ம.பி. அணியில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 103 பந்துகளில் 73 ரன்களை விளாசினார். இதில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக வெங்கடேஷ் ஐயர் 56 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
யஷ் துபே 7, அஜய் ரோஹேரா 13, சரண்ஷ் ஜெயின் 0, கேப்டன் ஷுபம் சர்மா 2, அக்சத் ரகுவன்ஷி 8, ராகுல் பதம் 21, மிஹிர் ஹிர்வாணி 12, குல்வந்த் கெஜ்ரோலியா 0, குமார் கார்த்திகேயா 6 ரன்கள் எடுத்தனர்.
தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். சாய் கிஷோர் சிறப்பாக பந்துவீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார்.