Published : 03 Dec 2023 06:48 AM
Last Updated : 03 Dec 2023 06:48 AM

பெங்களூருவில் இன்று கடைசி டி20 போட்டியில் இந்தியா - ஆஸி. மோதல்

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும்5-வது டி 20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்ட நிலையில் 3-வது ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை வசப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 175 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவையாக இருந்தன.

கேப்டன் மேத்யூ வேட், கிரீன் களத்தில் இருந்த நிலையில் 19-வதுஓவரை வீசிய முகேஷ் குமார் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆஸ்திரேலிய அணிக்குமேலும் அழுத்தம் கொடுத்தார். அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியால் இந்திய அணிடி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது. சர்வதேச டி 20 போட்டிகளில் இந்திய அணியின் 136-வது வெற்றியாகவும் இது அமைந்தது.

இதன் மூலம் சர்வதேச டி 20கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இந்த வகையில் இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி 135 ஆட்டங்களில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை குவித்த அணியாக இருந்தது. தற்போது பாகிஸ்தான் அணியை இந்தியா பின்னுக்குத் தள்ளி உள்ளது.

டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் கடைசிமற்றும் 5-வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதே மைதானத்தில் தான் உலகக் கோப்பை தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், நெதர்லாந்துக்கு எதிராக 98 பந்துகளில் 128 ரன்கள் விளாசியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரிடம் இருந்தும் உயர்மட்ட செயல் திறன் வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அவர், களமிறங்கும் பட்சத்தில் ரவி பிஷ்னோய் அல்லது அக்சர் படேல் வெளியே அமரவைக்கப்படுவார். போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மீண்டும் ஒருமுறைஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடும். அதேவேளையில் தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x